தியானத்தின் பயன் என்ன ?




PANNEER SELVAM K, JOINT DIRETOR (Retired), Department of Employment & Training, Govt.of Tamil Nadu

May 06,2023


வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்தவர்களில் அனேகம்பேர் தியானம் செய்ததில்லை. பிறகு ஏன் தியானம்? உலகின் கண்களில் நாம் வெற்றி அடைந்தோமா , தோல்வி அடைந்தோமா என்பது முக்கியம்தான் கல்வி கற்றவரா ? கல்லாதவரா ?..... பணக்காரரா ? ஏழையா? ... என்பதெல்லாம் வாழ்வில் வித்தியாசங்களை ஏற்படுத்துவது உண்மைதான் ! ஒப்பீட்டளவில் இவையெல்லாம் முக்கியம்தான். ஆனால், இவையெல்லாவற்றையும் விட ' நாம் யார் ' என்பதை அறிவதுதான் மிகவும் முக்கியமானது ! அமைதி என்பது வெளிப்புற சூழல்களை மாற்றுவதால் வருவதல்ல. நாம் யார் என்பதை ஆழமாக உணர்வதன் மூலமாகவே அமைதி கிடைக்கிறது. ஒரு பயிற்சி.... ! கண்களை மூடுங்கள் ! ' ஹலோ ' என்று சிலமுறை மனதிற்குள் நினையுங்கள் கண்களை திறவுங்கள் . ' ஹலோ ' என்றீர்களா? ' ஹலோ ' என்று சொன்னதும் , அதை கவனித்ததும் ஒருவரா? இல்லை... 
சொன்னவர் நாமா? கவனித்தவர் நாமா? சொன்னது மனம் ; கவனித்தது கவனம் இதனை 'விழிப்புணர்வு', 'Awareness' என்றும் சொல்லலாம் பிரச்னை என்னவென்றால், உங்கள் மனம் சதா நேரமும் எதையாவது நினைத்துக்கொண்டே, சிந்தித்துக்கொண்டேதான் இருக்கிறது. அதை நாம் கவனிப்பதும் இல்லை: கவனிக்க முயன்றாலும் கவனிக்க முடிவதும் இல்லை. எந்த மனத்தைக் கொண்டு நாம் வாழ்வில் சாதனைகளைப் புரிந்து உலகின் கண்களில் வெற்றியாளனாக தெரிகிறோமோ, அதே மனம்தான் நமக்குக் கட்டுப்படாமல் இயங்கும்போது நமது எல்லாவித துயரங்களுக்கும் காரணமாக இருக்கிறது! நெஞ்சில் எங்கோ சிறு வலி தோன்றினாலும், 'மாரடைப்பா?' என்று மனம் நினைக்கும். அச்சம் உடலெங்கும் பரவும் ! பல்வேறு எண்ணங்கள் தோன்றி நிலைமையை மேலும், மேலும் மோசமாக்கும்..
புற்றுநோய் நோய் அறிகுறிகளைப் பற்றி படிக்கும்போது தனக்கும் அதேபோன்ற அறிகுறிகள் இருப்பதாக நினைக்கும்! இப்படியே.... மனம் நினைத்து, நினைத்து ....அதன் எண்ணங்களால் 
அச்சம், கோபம், கோபம், காமம், மனச்சோர்வு போன்றவற்றை உருவாக்கி அமைதியை இழக்கச் செய்துவிடுகிறது. அகவே, வெளிப்புற காரணங்களை விட, நமது மனம்தான் நமது பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது, இப்படி நமக்கு எதிராக செயல்படும் மனதை நமது கட்டுப்பாட்டில் கொண்டு வருவது எப்படி? நாம் நினைப்பவர் மட்டுமல்ல . கவனிப்பவரும் கூட .. கவனிப்பவராக மாறி அதில் சிறிது நேரம் தொடர்ந்து இருக்க பயிற்சி செய்வதுதான் தியானம் நாம் கவனிப்பவராக ( SUBJECT ) மாறிவிட்டால், மனம் வேறொருவராக 
( OBJECT ) மாறி விடும் நமது மனம் உருவாக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபட, நாம் சிறிது நேரம் கவனிப்பவராக மாற வேண்டும் வெளியுலக வாழ்க்கையின் வெற்றியில் மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்கும் என்று தேடித்தேடி அலுத்த பின், தேடுவது நமக்குள்ளேயே இருப்பதை தெரிய வைப்பதுதான் தியானம். நாம் நினைப்பவர் அல்ல கவனிப்பவர் என்று, 'நாம் யார்' என்பதை உணர வைத்து நாம் தேடும் அமைதியை தருவதே தியானத்தின் பயன்